அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான Los Angeles மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் Nithya Raman போட்டியிட உள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய மேயர் Karen Bass-ஐ எதிர்த்து அவர் களமிறங்குகிறார்.
கேரள வேர்களைக் கொண்ட தமிழ் குடும்பத்தில் 1981-ஆம் ஆண்டு பிறந்த நித்யா ராமன், தனது 6-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவர் Harvard University-யில் அரசியல் கல்வியும், Massachusetts Institute of Technology-யில் நகரத் திட்டமிடல் தொடர்பான கல்வியும் பயின்றுள்ளார்.
மேலும், சென்னையில் துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை தொடங்கி சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர், தன்னை ஜனநாயக சோஷலிசவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சலெஸ் மேயர் தேர்தலுக்கான ஆரம்பகட்டத் தேர்தலில் (Primary Election) முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் இறுதித் தேர்தலுக்கு தகுதி பெற்றனர். ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் இரண்டாவது இடத்தைப் பெற்ற நித்யா ராமன், நவம்பரில் நடைபெறும் இறுதித் தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்கொள்கிறார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற சாதனையையும் நித்யா ராமன் படைத்துள்ளார்.
தேர்தல் போட்டி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், லாஸ் ஏஞ்சலெஸ் மேயர் பதவிக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நகரம் முழுவதும் ஆதரவு திரட்டிய தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ் நகரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நித்யா ராமன் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களான நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சலெஸ் ஆகியவற்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நிர்வகிக்கும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
