புதுடெல்லி: கிரிக்கெட் லீக் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த Rishabh Pant, அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
2025-ம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், ரூ.27 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ரிஷாப் பன்ட்டை லக்னோ அணி ஒப்பந்தம் செய்தது. விக்கெட் கீப்பர்-பேட்டரான அவர் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால், கடந்த இரண்டு சீசன்களிலும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 2025 சீசனில் 14 போட்டிகளில் 269 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் தலைமையிலான லக்னோ அணி 7-வது இடத்தை பிடித்தது.
அதேபோல், 2026 சீசனில் 14 போட்டிகளில் 312 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த சீசனில் லக்னோ அணி 14 போட்டிகளில் 10 தோல்விகளையும் 4 வெற்றிகளையும் பெற்று வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி 10-வது இடத்தில் முடித்தது. மேலும், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் அமைந்தது.
ரிஷாப் பன்ட் தலைமையில் லக்னோ அணி கடந்த இரண்டு சீசன்களில் மொத்தம் 28 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளையும் 18 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷாப் பன்ட் அணியின் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கோரிக்கையை லக்னோ அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், அடுத்த சீசனுக்கு முன் லக்னோ அணி புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
