சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 4) முதல்வர் விஜய் முன்னிலையில், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனமும் தமிழக அரசும் ரூ.18,600 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த முதலீடுகள் மூலம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
முதலாவது திட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இரண்டாவது திட்டமாக, கோயம்புத்தூரில் ரூ.2,500 கோடி முதலீட்டில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
மூன்றாவது திட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள L&T கப்பல் கட்டும்தளத்தை ரூ.1,100 கோடி முதலீட்டில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2036ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான முயற்சியில் இந்த முதலீடுகள் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் மாநிலத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி துறை வளர்ச்சி பெறும். மேலும், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தள விரிவாக்கம் கடலோர காற்றாலைத் தொழில்துறைக்கான உலகத் தரமான உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
