கேரளாவில் மிக உயரமான யானையாக கருதப்படும் ராமன் யானையை பறிமுதல் செய்து, கேரள அரசே தனது சொந்த செலவில் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 10.53 அடி உயரம் கொண்ட ராமன் யானை, கேரளாவின் உயரமான யானைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த யானையை கிருஷ்ணன் குட்டி என்பவர் பராமரித்து வந்த நிலையில், திருமண விழாக்கள் மற்றும் மதச் சடங்குகளில் யானையை பயன்படுத்தி வருமானம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
யானைகளை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு மீறப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “கேரளாவின் உயரமான யானையாக கருதப்படும் ராமனை வைத்து வணிக ரீதியாக வருமானம் ஈட்டுவது வருத்தமளிக்கிறது. இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “வாயில்லா உயிரினங்களுக்கு ஏற்படும் அநீதியை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. விலங்குகளின் நலன் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் மவுனமாக இருக்காது. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை கிருஷ்ணன் குட்டி பின்பற்றவில்லை” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் கிருஷ்ணன் குட்டிக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரிடமிருந்து ராமன் யானையை பறிமுதல் செய்து, கேரள அரசின் பராமரிப்பில் மறுவாழ்வு மையத்தில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜெயகிருஷ்ண மேனன் தாக்கல் செய்த மனுவில், ராமன் யானை மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு சொந்தமானது என்றும், கிருஷ்ணன் குட்டியிடம் தற்காலிக பராமரிப்புக்காக மட்டுமே ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த கிருஷ்ணன் குட்டி, உயில் மற்றும் தானப்பத்திரங்கள் மூலம் யானை சட்டப்பூர்வமாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக தானே பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
