புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.க்களில் 32 சதவீதம் பேருக்கு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 233 உறுப்பினர்களில், 229 எம்.பி.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இடம் காலியாக இருந்ததுடன், மூன்று எம்.பி.க்களின் தகவல்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 37 உறுப்பினர்களின் விவரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் படி, 229 எம்.பி.க்களில் 73 பேர் (32%) மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 36 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், நான்கு பேருக்கு கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கட்சிவாரியாகப் பார்க்கையில், பா.ஜ.க.வில் 27 பேர், காங்கிரசில் 12 பேர், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளில் தலா 4 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளில் தலா 3 பேர் மீது வழக்குகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
சொத்து விவரங்களைப் பொருத்தவரை, 31 எம்.பி.க்கள் (14%) 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகளை கொண்டுள்ளனர். முக்கிய கட்சிகளில் பா.ஜ.க.வில் 6 பேர், காங்கிரசில் 5 பேர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் 4 பேர், ஆம் ஆத்மியில் 2 பேர், பி.ஆர்.எஸ்.வில் 2 பேர் மற்றும் தேசியவாத காங்கிரசில் 3 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
மொத்தமாக ராஜ்யசபா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 120.69 கோடி ரூபாயாக உள்ளது. இதில் அதிகபட்சமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 522.63 கோடி ரூபாய் என பதிவாகியுள்ளது.
அதேபோல், அதிக சொத்து கொண்ட எம்.பி.யாக பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த பண்டி பார்த்தசாரதி குறிப்பிடப்பட்டுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 5,300 கோடி ரூபாய்க்கும் அதிகம் என ஏ.டி.ஆர். அறிக்கை தெரிவித்துள்ளது.
