சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரம்ஜான் நோன்பின் முடிவை குறிக்கும் ஈத் அல் பித்ர் தொழுகையில் பங்கேற்க சென்ற பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க் ஆகியோருக்கு எதிராக சிலர் முழக்கமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிட்னியில் உள்ள பெரிய மசூதியான லக்கம்பாவில் நடைபெற்ற இந்த தொழுகை நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொழுகை தொடங்கிய சுமார் 15 நிமிடங்களில், அங்கு இருந்த சிலர் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
“இனப்படுகொலைக்கு ஆதரவானவர்கள், வெட்கக்கேடு, வெளியேறு” எனக் கோஷமிட்டதுடன், ஒருவரோ “அவர் ஏன் இங்கே இருக்கிறார்? அவரை வெளியேற்றுங்கள்” என பிரதமரை குறிவைத்து குரல் எழுப்பினார்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து, பிரதமர் அல்பனீஸ் அங்கிருந்து வெளியேறினார். முழக்கமிட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், லக்கம்பா மசூதியை நிர்வகிக்கும் லெபனான் முஸ்லிம் சங்கம், பிரதமரை அழைத்ததற்கான முடிவை நியாயப்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்னைகளை நேரடியாக தெரிவிக்கவே இந்த அழைப்பு வழங்கப்பட்டது என அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு செயல்படுகிறது என்றும், போரை நிறுத்த அழுத்தம் தரவில்லை என்றும் முஸ்லிம் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், கடந்த டிசம்பரில் போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, சில முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக, முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே, இந்த எதிர்ப்பிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
