புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் ஒரு மாத காலத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.
‘சேவா சங்கல்ப் அபியான்’ எனப்படும் ‘சேவை உறுதிமொழி’ இயக்கத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள்
பிரதமர் மோடி 2001 அக்டோபர் மாதம் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். 2014 மே மாதம் வரை சுமார் 13 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதே ஆண்டு மே மாத இறுதியில் மோடி நாட்டின் பிரதமராக முதன்முறையாக பதவியேற்றார்.
தொடர்ந்து 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.
‘தொண்டர் முதல் தலைவர்’ பயணம்
மோடியின் 25 ஆண்டு அரசு தலைமைப் பயணத்தை கொண்டாடும் வகையில், செப்டம்பர் 17 முதல் ஒரு மாத காலத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கூறுகையில், சாதாரண தொண்டராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மோடி, தற்போது நாட்டின் பிரதமராக அயராது பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும், சமூக வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது”
மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் 25 கோடி ஏழை குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக நிதின் நபின் தெரிவித்தார்.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற காலத்தில் நாட்டின் கொள்கை மற்றும் பொருளாதார நிலை பலவீனமாக இருந்ததாக கூறிய அவர், தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தும் கவுரவமும் உயர்ந்துள்ளதாகவும், 37-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
செப்.17 ‘சேவை தினம்’
மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி ‘சேவை தினமாக’ கடைப்பிடிக்கப்பட உள்ளது.
அன்று நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்படும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் பிரதமர் மோடியின் பொது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளக்கேற்ற உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்.7-ல் முக்கிய நிகழ்ச்சி
அக்டோபர் 7-ம் தேதி மோடி அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதையொட்டி ‘சேவா சங்கல்ப் அபியான்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக முக்கிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபயணம், பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் போட்டிகள்
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை பள்ளிகளில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சான்றிதழ்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் சுகாதார முகாம்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இளைஞர்களுக்கான ‘இன்னோவேஷன் சேலஞ்ச்’
இளைஞர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் கண்டுபிடிப்பாளர்களுக்காக ‘சேவா பர்ஸ்ட் இன்னோவேஷன் சேலஞ்ச்’ போட்டி நடத்தப்பட உள்ளது.
மேலும், அக்டோபர் 2-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
