சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் போட்டியிடுவார்கள் என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிப்பு
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (செப். 10) தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சத்யபாமா, மரகதம் குமரவேல் போட்டி
தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் தவெக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இருவரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து, பின்னர் தவெகவில் இணைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெற்றி ஒன்றே குறிக்கோள்”
தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியினர் அனைவரும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமாவாசை நாளில் வேட்பாளர் அறிவிப்பு
அமாவாசை நாளான இன்று நல்ல நாள் என்பதால், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்காக காத்திருந்ததாக தவெக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
