மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை வழங்கி ஆயிரக்கணக்கான மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதி செய்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் பைகுல்லா மற்றும் ரே ரோடு பகுதிகளில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர்கள் எலி மருந்து கலந்த பொருளை உட்கொண்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாத்திரைகளை வழங்குவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனித்தனர். இதையடுத்து, ஒலிபெருக்கி மூலம் அந்த மாத்திரைகளை யாரும் உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாத்திரைகளை வழங்கிய நபரை கைது செய்து, அவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான கேப்சூல்கள் மற்றும் அவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் புனேவைச் சேர்ந்த பயாஸ் பிரேம்ஜி என்பது தெரியவந்துள்ளது. பெயின்ட் வியாபாரியான அவர், வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் எனக் கூறி விஷத்தன்மை கொண்ட கேப்சூல்களை வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், ஆன்லைன் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட காலி கேப்சூல்களை வாங்கி, அவற்றில் எலி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘ஜிங்க் பாஸ்பைடு’ ரசாயனப் பொடியை நிரப்பியிருந்ததாகவும், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு அவற்றை வழங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது மொபைல் போன், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்து, இந்தச் சம்பவத்திற்கு பின்னால் வேறு நபர்கள் அல்லது அமைப்புகளின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
