மேற்காசிய போர் உலகை பின்னோக்கி தள்ளும்: பிரதமர் மோடி எச்சரிக்கை
தி ஹேக்: மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரும், உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடும் கடந்த தசாப்தங்களில் உலகம் அடைந்த முன்னேற்றங்களை பின்னோக்கி தள்ளக்கூடும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
நெதர்லாந்து பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, “முதலில் கோவிட் பரவல் ஏற்பட்டது. அதன் பின்னர் உலகின் பல பகுதிகளில் போர்கள் வெடித்தன. தற்போது எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது” என்று கூறினார்.
மேலும், “இந்த தசாப்தம் உலகிற்கு நெருக்கடிகளின் தசாப்தமாக மாறி வருகிறது” என்றும் கவலை தெரிவித்தார்.
“இந்த நிலை விரைவில் மாறவில்லை என்றால், கடந்த பல தசாப்தங்களில் உலகம் அடைந்த சாதனைகள் அனைத்தும் பாதிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மீண்டும் வறுமை என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்படக்கூடும்” என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகம் இன்று மீள்திறன் கொண்ட மற்றும் நம்பகமான விநியோக சங்கிலி அமைப்புகளை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகிறது” என்றார்.
“வெளிப்படையான மற்றும் நம்பகமான விநியோக சங்கிலியை உருவாக்க இந்தியாவும் நெதர்லாந்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “நெதர்லாந்தில் வாழும் இந்தியர்கள் அளித்த அன்பும் உற்சாகமும், நான் இந்தியாவில் நடைபெறும் ஒரு கொண்டாட்டத்தில் பங்கேற்றது போன்ற உணர்வை அளிக்கிறது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
