ரூ.182 கோடி மதிப்பிலான ‘கேப்டகன்’ போதைப்பொருள் பறிமுதல்
புதுடில்லி: இந்தியாவில் முதல் முறையாக, ரூ.182 கோடி மதிப்பிலான 228 கிலோ ‘கேப்டகன்’ போதைப்பொருள் டில்லி மற்றும் குஜராத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளுக்கு இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டில்லியை மையமாக வைத்து நடைபெற்று வந்த இந்த கடத்தல் தொடர்பாக, “ஆப்பரேஷன் ரேஜ்பில்” என்ற பெயரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, டில்லி நெப் சராய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 11ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் சப்பாத்தி தயாரிப்பு இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31.5 கிலோ எடையுள்ள ‘கேப்டகன்’ போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இயந்திரம் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் தங்கியிருந்த சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த 14ம் தேதி குஜராத்தின் முந்த்ரா பகுதியில் உள்ள கொள்கலன் சேமிப்பு நிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஒரு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பைகளில் இருந்து 196.2 கிலோ கேப்டகன் தூள் மீட்கப்பட்டது.
இரு இடங்களிலும் மொத்தமாக 227.7 கிலோ கேப்டகன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.182 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கேப்டகன் போதைப்பொருள் பறிமுதல் இதுவே முதல் முறையாகும்.
மேலும், இந்த போதைப்பொருள் மேற்காசிய நாடுகளுக்கும், குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் அனுப்பப்பட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
