மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வேளாண் அமைச்சர் வினோத், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகாவில் மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அன்புமணி ராமதாஸ், மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், அது கண்டிக்கத்தக்க முடிவு என்றும் கூறினார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான இருதரப்பு பிரச்சினை அல்ல என்றும், அது கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச கோரிக்கை மட்டுமே என்பதால், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, மேகேதாட்டு விவகாரத்தை இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் அணையை முழுமையாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் கொள்ளளவு மற்றும் தண்ணீர் திறப்பு நடைமுறைகள் போன்ற விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அன்புமணி எச்சரித்தார்.
மேலும், மேகேதாட்டு போன்ற முக்கிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேகேதாட்டு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு செல்வது தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கருத்து தெரிவித்தார்.
எனவே, மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் மேகேதாட்டு அணை திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
