ராஜபாளையம்: “சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான மே 4ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துகளுக்கும், தற்போது அவர் பேசும் பேச்சுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடைபெற்ற பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்லப்பிள்ளை படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அப்போது, “ஆட்சி மாறினால் கட்சி மாறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கொள்கையை விட்டு கட்சி மாற மாட்டார்கள்” என்றார்.
மேலும், “தற்போது ஒரு கட்சியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மறுநாளே வேறு கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழக அரசியல் மாற்றம் குறித்து பேசுகையில், “அதிமுக, திமுக அல்லாத புதிய தலைமையே ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் இருந்ததை எங்களாலும் முழுமையாக கணிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
“தனிப்பெரும் கட்சியாக த.வெ.க அரசு அமைக்க நாங்கள் ஆதரவு அளித்தோம். இல்லையெனில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்திருக்கும்” என்றும் சண்முகம் கூறினார்.
மேலும், “இந்த அரசு எந்த வகையான பொருளாதார கொள்கையை பின்பற்றப் போகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து பேசுகையில், “அதில் சில வருத்தங்கள் இருக்கலாம். கம்யூனிஸ்ட்கள் விரைவில் விலகிவிடுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் எங்களின் முடிவுகள் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்” என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசிய அவர், “தேர்தல் முடிவு வெளியான மே 4ஆம் தேதி புதிய ஆட்சிக்கு ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும், அதன் செயல்பாட்டை பார்த்து விமர்சிக்கலாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆனால் அப்போது கூறிய கருத்துகளுக்கும், தற்போது அவர் மற்றும் திமுக தலைவர்கள் பேசும் கருத்துகளுக்கும் தொடர்பே இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “தினமும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்களாக இருந்தும், கடந்த 15 நாட்களாக அமைதியாக இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
“முதன்முறையாக பதவியேற்ற போது அண்ணாதுரை மற்றும் கருணாநிதியும் புதியவர்கள்தான். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.
