புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS Aridhaman நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய கடற்படை உள்நாட்டிலேயே அணு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கி வருகிறது. இதன் பகுதியாக, முதல் கப்பலான INS Arihant 2016ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்டது. இரண்டாவது கப்பலான INS Arighat 2024ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான அரிதமன் தற்போது கடற்படையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், Rajnath Singh தனது சமூக ஊடகத்தில் “அரிதமன் என்பது ஒரு வார்த்தை அல்ல; அது ஒரு சக்தி” என பதிவிட்டுள்ளார்.
இந்த கப்பல் சுமார் 7,000 டன் எடை கொண்டதாகவும், 3,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், Bhabha Atomic Research Centre உருவாக்கிய 83 மெகாவாட் அழுத்தப்பட்ட நீர் அணு உலையால் இயக்கப்படுகிறது. இதனால் நீருக்கடியில் நீண்ட நேரம் ரகசியமாக செயல்பட முடியும்.
இந்த கப்பலில் உள்ள எட்டு செங்குத்து ஏவுகணை குழாய்கள், முந்தைய அரிஹந்த் கப்பலை விட இரட்டிப்பு திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிரிகளுக்கு எதிரான பதிலடி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், INS Taragiri என்ற அதிநவீன போர்க்கப்பலையும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த கப்பல் ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்கும் நவீன ஆயுதங்களையும் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நெருக்கடி காலங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது முதல், வர்த்தக கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களை பாதுகாப்பது வரை இந்திய கடற்படை முக்கிய பங்காற்றுகிறது” என தெரிவித்தார்.
