திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு தகுதியும் அருகதையும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மாநிலம் பாதிக்கப்பட்டதாகவும், பாஜ ஆதரவுடன் அரசியல் நிலைமை பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
அவர் கூறுகையில், கடந்த ஆட்சியில் கோடநாடு சம்பவம், சாத்தான்குளம் வழக்கு, நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள், பொள்ளாச்சி சம்பவம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.
திமுக ஆட்சி இந்த நிலையை மாற்றி, தமிழகத்தை முன்னேற்றியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் கவனம் பெறும் மாநிலமாக உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “இபிஎஸ் சுய சிந்தனை இல்லாமல் செயல்பட்டவர். அவர் திமுக திட்டங்களை காப்பியடித்து புதிய பெயரில் வெளியிடுகிறார்” என விமர்சித்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முன்பு விமர்சித்தவர், தற்போது அதையே ஆதரிப்பதாகவும், மக்கள் அவரை நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார்.
“திமுக சொன்னதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இபிஎஸ் சொன்னதை கூட செய்ய மாட்டார் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என கூறினார்.
பாஜ மற்றும் அதிமுக கூட்டணியையும் அவர் விமர்சித்து, “டபுள் இன்ஜின் ஆட்சி என்ற பெயரில் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும், “இபிஎஸ் பாஜவுக்கு துணைபோவது, சமரசம் செய்வது, ஜால்ரா போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.
கருணாநிதி குறித்து இபிஎஸ் பேசியதை சுட்டிக்காட்டி, “அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவரது பெயரை கூற கூட இபிஎஸ்க்கு உரிமை இல்லை” என கூறினார்.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுத்தது குறித்து நினைவுபடுத்திய அவர், “அந்த நேரத்தில் இரக்கம் காட்டாத நீங்கள், இன்று அவரைப் பற்றி பேச முடியாது” என விமர்சித்தார்.
மேலும், “சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோருக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். அவரால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது” என கூறினார்.
இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற முதல்வர் ஸ்டாலினின் வாகனம், வாகைக்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டது.
