சென்னை: கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை வழங்கும் விவகாரங்களில், அமைச்சரவையின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவராவார் என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அமைச்சரவையின் இந்த முடிவை கவர்னர் நிராகரித்தார். இதேபோல், பல கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரைகளையும் கவர்னர் நிராகரித்தார்.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது” என ஒரு அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. அதே நேரத்தில், “இந்த விவகாரத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது; அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்” என மற்றொரு அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது என்று மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு இரண்டு வேறு தீர்ப்புகள் வந்ததால், முன்கூட்டியே விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு விவகாரங்களில் கவர்னரின் அதிகாரம் என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான ஒன்பது வழக்குகளை நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே. இளந்திரையன், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை வழங்கும் விவகாரங்களில், அரசியலமைப்பின் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தும் போது, கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவராவார் என்று தெளிவுபடுத்தினர்.
அமைச்சரவையின் பரிந்துரை கவர்னருக்கு ஏற்புடையதா இல்லையா என்பது பொருட்டல்ல என்றும், எந்த சூழ்நிலையிலும் கவர்னர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது என்றும் கூறப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
