தர்மபுரி: “கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதி போல வைத்திருந்தார்” என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவின் ஆடியோவை சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சனம் செய்தார்.
தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக வேட்பாளர்கள் பாலக்கோடு அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி மரகதம், அரூர் சம்பத்குமார் மற்றும் பாமக வேட்பாளர்கள் தர்மபுரி சவுமியா, பென்னாகரம் செல்வம் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியபோது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 26,651 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“அதிமுக பாஜகவிற்கு அடிமை” என கூறுபவர்களுக்கு பதிலளித்த அவர், எங்கள் கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் யாருக்கும் அடிமை அல்ல எனவும், திமுக கூட்டணியில் உள்ளதைப் போல கூஜா தூக்கும் கட்சி அல்ல எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, வெள்ளை குடையோடு சென்றவர் ஸ்டாலின் என கூறிய அவர், தற்போது இரட்டை வேடம் போடுகிறார் என்றும் விமர்சித்தார். தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, “அதிமுகவை நாங்கள் விற்கவில்லை; நீங்கள் தான் காங் கட்சியிடம் உங்கள் கட்சியை விற்றுவிட்டீர்கள்” என திமுகவை குற்றம்சாட்டினார்.
“காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும், ஆ.ராஜாவும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்தனர். கூட்டணியில் இருந்தபோதே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் நம்மை பற்றி பேசலாமா?” என கேள்வி எழுப்பினார்.
அடுத்து ஆ.ராஜா ஆடியோ குறித்து பேசிய அவர், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராஜாவுக்கு காட்டவில்லை என்றும், சமூகநீதி பேசும் கட்சியில் ஜாதி பாகுபாடு உள்ளது என்றும் குற்றம்சாட்டினார். கலைஞர் டிவிக்கு பணம் சென்றதை ராஜா ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
“கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதி போல வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றிவிட்டார். ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் தான் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை” என ஆடியோவில் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், “ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்கிறதா? டில்லிக்கு போனால் ஆங்கிலத்தில் பேசுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்பமாட்டார். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முடியாது; என் செல்வாக்கையும், அறிவையும், சமூக ஆதரவையும் தள்ள முடியாது” என ராஜா கூறியதாகவும் தெரிவித்தார்.
“தன் சொந்த அப்பாவையே கைதி போல வைத்தவர், மக்களை எப்படி நடத்துவார்? உண்மை ராஜா மூலம் வெளிவந்துவிட்டது. திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார். அண்ணாதுரை தொடங்கிய திமுகவை, கருணாநிதியும் ஸ்டாலினும் கபளீகரம் செய்துவிட்டனர்” என பழனிசாமி கூறினார்.
