முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் நியமிக்கப்பட்டது தொடர்பான அரசாணை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் சுமார் 40 நாட்கள் மறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முதல்வருக்கு தனிச் செயலாளரை நியமிப்பது வழக்கமான நடைமுறையாகும். இதன்படி, முதல்வர் விஜயின் சினிமா மேலாளரான ஜெகதீஷ் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது. இதேவேளை, மே 12ஆம் தேதி முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் விஜயின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த ஜெகதீஷ், தன்னை முதல்வரின் தனிச் செயலாளராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். அதனுடன், அவரது நியமனத்திற்கான அரசாணையும் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அரசாணையின்படி, ஜெகதீஷ் மே 12ஆம் தேதியே தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அரசாணையை தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும், சுமார் 40 நாட்கள் கழித்து மட்டுமே இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பதவியேற்றபோது வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
