சென்னை: த.வெ.க., தலைவர் Vijay, சென்னை பெரம்பூர் தொகுதியில் தன் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை துவக்க உள்ளார்.
கட்சியை தொடங்கிய பிறகு, ஆரம்ப கட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, அந்த பிரசார பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு நகரங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.
தற்போது தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளார். இதனை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெரம்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். தொடர்ந்து கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்த உள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மொத்தம் 20 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் அவரது பிரசார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் விஜய், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்றார். அதே நேரத்தில், அவரது கட்சியை தே.ஜ. கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ. முயற்சி செய்தது. ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்தபோதும், எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. இதனால், சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 115 வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், 234 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, அவர்களை அறிமுகப்படுத்த உள்ளார்.
