பாலியல் தொழிலில் திணிக்கப்பட்டு பின்னர் மீட்கப்படும் பெண்களை குற்றவாளிகளாக கருதக் கூடாது என்றும், அவர்களுக்கு கண்ணியமான மறுவாழ்வை வழங்குவது அரசின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேசமயம், மீட்புப் பணிகளின் போது போலீசார் கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் பெண்கள் மீட்கப்பட்ட பிறகு, அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி ‘பிரஜ்வாலா’ சமூக நல அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ‘பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு திட்டம்’ என்ற பெயரில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்த திட்டத்தின் கீழ், மீட்கப்படும் பெண்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு மீட்கப்படும் பெண்களை கைதிகளைப் போல நடத்தவோ, குற்றவாளிகளாக கருதவோ கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் சம்மதமின்றி எந்த மறுவாழ்வு திட்டத்தையும் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது என்றும், சமூகத்தில் அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் அவப்பெயரைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் தனியுரிமை மற்றும் அடையாளம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போலீசாருக்கான வழிகாட்டுதல்களில், மீட்கப்பட்ட பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் தங்க வைக்கக் கூடாது, அவர்களின் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கூடாது, உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மனித கடத்தல் தடுப்பு பிரிவுகளை டி.எஸ்.பி. அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் வழிநடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்த நபர்களை தேவையற்ற மீட்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
