மின்துறையில் இடைத்தரகர், முறைகேடுக்கு இடமில்லை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
சென்னை: “மின் வாரியத்தில் வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும். இந்த ஆட்சியில் இடைத்தரகர் மற்றும் முறைகேடுகளுக்கு இடமில்லை” என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மின் வாரியத்துடன் தொடர்புடைய பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள், மின் சாதனங்கள் வினியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடு தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைத்தனர்.
வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் பேசுகையில், “நிலக்கரி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒரே நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் ஒப்பந்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
சூரியசக்தி மின் திட்ட முதலீட்டாளர்கள், “சூரியசக்தி திட்டங்களுக்கு விண்ணப்பித்ததும் விரைவாக அனுமதி வழங்க வேண்டும். 2019க்கு பிறகு இந்த துறையில் முதலீடுகளை ஈர்க்க தெளிவான கொள்கை இல்லை. புதிய கொள்கையை விரைவில் வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மின்துறையில் கடந்த காலங்களில் நிலவி வந்த முறைகேடுகளை களைவதற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், “முறைகேடாக வழங்கப்பட்ட டெண்டர்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. இனி புதிய வெளிப்படையான டெண்டர் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
“ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்ட்டல் மூலம் வெளிப்படையான டெண்டர் முறை செயல்படுத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.
“இந்த ஆட்சியில் இடைத்தரகர் மற்றும் முறைகேடுகளுக்கு இடமில்லை. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் முறை இனி தொடராது. தகுதியின் அடிப்படையில் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் வெளிப்படையாக டெண்டர்கள் வழங்கப்படும்” என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார்.
