சென்னை: சமூக வலைதள செயற்பாட்டாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் Seeman கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தவெக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்த மாரிதாஸை கைது செய்திருப்பது அதிகாரத் திமிரின் வெளிப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.
மாரிதாஸின் கருத்துகள் அவதூறானவை என அரசு கருதினால், சட்டப்படி வழக்குத் தொடரலாம். ஆனால் எந்தவித விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்வது ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் அதிரடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
தவெக அரசை மற்றவர்கள் விமர்சிப்பதை காவல்துறை கவனிப்பதாகவும், ஆனால் தவெகவினர் பிறரை விமர்சிப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் Vijay, தன்னை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சிக்கலாம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது விமர்சனங்களுக்கு பதிலாக கைது நடவடிக்கை எடுப்பது முரண்பாடான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் இறுதியில், அதிகாரமும் அரசியல் சூழ்நிலைகளும் நிரந்தரமானவை அல்ல என்றும், இன்று ஒருவரிடம் இருக்கும் அதிகாரம் நாளை மற்றவர்களிடம் செல்லக்கூடும் என்பதால் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
