புதுடில்லி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பாமக கட்சியின் “மாம்பழம்” சின்னம் தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் கமிஷன், மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டால் சின்னத்தை தற்காலிகமாக முடக்குவது தான் வழக்கமான நடைமுறை எனவும், குலுக்கல் முறையும் பின்பற்றப்படவில்லை எனவும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு, தேர்தல் கமிஷனிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தான் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தது.
இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்” என கருத்து தெரிவித்தார். மேலும், தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் ‘பிரெண்ட்லி மேட்ச்’ ஆடுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதனுடன், மாம்பழம் சின்னம் தொடர்பான உரிமை குறித்து உடனடியாக சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அந்த மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் சிவில் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது.
