தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைகளுக்குள் அமைந்துள்ள வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், முக்கிய நபர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,321 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களின் எல்லைகளுக்குள் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களின் வீடுகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் இல்லங்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள், கல்லறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனுடன், காவல் நிலைய எல்லைகளில் உள்ள ரவுடிகளின் வீடுகள், சந்தேக நபர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும் இடங்கள் தொடர்பான தகவல்களும் புதுப்பிக்கப்படுகின்றன. மொத்தமாக 26 பிரிவுகளின் கீழ் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே காவல் நிலையங்களில் உள்ள தரவுகளை புதுப்பிப்பதற்கும், அவசர காலங்களில் புதிய இடங்களுக்கு போலீசாரை விரைவாக அனுப்புவதற்கும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
