உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்கும் நோக்கில், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உள்ளிட்ட ஐந்து பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் ஐந்து பேரின் பெயர்களை பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளது. அவருடன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷகீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நியமனங்களின் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நீதித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட வி.மோகனாவின் நியமனம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.மோகனாவுக்கு தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
