கொச்சி: மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. அந்த கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.
நேரடி போட்டி
கேரளாவில் அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் கேரளா வந்த பிரதமர் மோடி, எர்ணாகுளம் மாவட்டத்தின் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ₹10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பா.ஜ. பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபடுகின்றன.
எங்களது கடமை
போர் சூழ்நிலையை பயன்படுத்தி காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த கட்சிகளிடம் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேற்காசிய நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் அரசின் கடமை.
என் அரசு ஒரு இந்தியரை கூட பாதுகாப்பற்ற நிலையில் விடாது. சவாலான காலங்களில் எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் நம் நாடு தற்சார்பு அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் இந்தியா சுயசார்புடன் செயல்பட முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
