டில்லியில் நடைபெற்று வரும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த 480-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது சிலர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், போராட்டத்தைத் தூண்டி இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக டில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் 480-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டில்லி போலீஸ் உதவி ஆணையர் சுமித் ஜா வெளியிட்டுள்ள வீடியோவில், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை இளைஞர்களும் மாணவர்களும் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த சமூக வலைதளக் கணக்குகள் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போதும் தவறான தகவல்களைப் பரப்பியதாகவும், தற்போது நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாகவும் போலி தகவல்களை பரப்ப முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
