தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு தற்போது அனுமதி இல்லை என்றும், அரசு உரிய கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், பைக் டாக்சி தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்து கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த கொள்கை அறிவிக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பைக் டாக்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், தற்போது பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என்றால், அதுகுறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விளம்பரப்படுத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்சிகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மனுதாரர் தரப்பில், மத்திய அரசு பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாநில அரசு அதை மறுக்க முடியாது என்றும், மத்திய அரசின் விதிமுறைகளே நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இறுதியாக, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குமா அல்லது வழங்காதா என்பது குறித்து விரைவில் தெளிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
