சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தை முதல்வர் விஜய் பேட்டரி காரில் சுற்றிப் பார்வையிட்டார். இந்த நிகழ்வு அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.
தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய், அங்கிருந்த பேட்டரி காரில் ஏறி கோட்டை வளாகத்தை சுற்றிப்பார்த்தார். அப்போது பழமையான செயிண்ட் மேரிஸ் தேவாலயத்திற்கும் அவர் சென்றார். அங்குள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு, அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களை கேட்டறிந்தார்.
முதல்வர் விஜய் பேட்டரி காரில் சுற்றிப்பார்ப்பதாக தகவல் பரவியதும், தலைமைச் செயலக ஊழியர்கள் பலரும் அவரைக் காண அங்கு திரண்டனர். மேலும் கோட்டை பகுதியிலும் பொதுமக்கள் கூடினர்.
இந்த பயணத்தின் போது முதல்வருடன் அவரது தனிப்பிரிவு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மட்டுமே உடன் சென்றனர். அமைச்சர்கள் யாரும் இந்த பயணத்தில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகங்கள் கோட்டை வளாகத்தில் இயங்கி வருகின்றன. அதேபோல் கோட்டை போலீஸ் நிலையம், தபால் நிலையம், உணவகம் உள்ளிட்ட பல முக்கிய வசதிகளும் அங்கு செயல்பட்டு வருகின்றன.
