சென்னை: தமிழக பாஜ தேர்தல் அறிக்கையை முன்னாள் தேசிய தலைவர் J. P. Nadda வெளியிட்டார். இதில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கியமாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் (பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும்.
பெண்களுக்காக மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும். பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழுக்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
விவசாயிகளுக்காக, கால்நடை, இறால், தேனீ, கோழி வளர்ப்பு தொடங்க ரூ.50,000 உதவி வழங்கப்படும். மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை, மிளகாய் போன்ற பயிர்களுக்கு சந்தை ஆதரவு மற்றும் ஆண்டுக்கு ரூ.9,000 நிதியுதவி வழங்கப்படும்.
மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். குறைநிலை கால உதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும். 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்படும்.
முதல் முறையாக தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன் மற்றும் ஜிஎஸ்டி சலுகைகள் வழங்கப்படும்.
சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளாக, பாலியல் மற்றும் போக்சோ வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பஸ்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனைகள், கோவில்களில் உள்ளூர் மக்களுக்கு பிரத்யேக தரிசனம், தைப்பூசம் மாநில விழா அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
