கோவை: கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களை கொட்டகைகளில் அடைத்து வைத்து, ₹8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக ஆசை காட்டி கையெழுத்து பெறப்படுகின்றது என அ.தி.மு.க. வேட்பாளர் Amman Arjunan மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரிடம் புகார் அளித்த பின்னர் அவர் கூறியதாவது: கோவையில் பல இடங்களில் கொட்டகைகள் அமைத்து, மக்கள் கூட்டமாக அழைத்து வைக்கப்படுகின்றனர். ஒரு டிவிஷனுக்கு குறைந்தபட்சம் மூன்று கொட்டகைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொட்டகைகளில் 300 பேர்வரை அடைத்து வைத்து, உணவு மற்றும் பணம் வழங்கப்படுவதாகவும், மற்ற கட்சிகளின் பிரசாரத்திற்கு மக்கள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வாக்காளர்களுக்கு கூப்பன் வழங்கிய சம்பவங்களை ஆதாரங்களுடன் போலீசாரிடம் அளித்துள்ளதாகவும், ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். புகார் அளித்தவரின் குடும்பத்தினரிடம் போலீசார் அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கலெக்டரிடம் அளித்த மனுவில், “தி.மு.க.க்கு வாக்களித்தால் ₹8,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும்” என கூப்பன் வழங்கி உறுதிமொழி கையெழுத்து பெறப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோவை ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பெயருடன் இந்த செயல்களில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
