பூச்சிகளின் பெயரில் கட்சி தொடங்குவது ஜனநாயகத்தை கேலி செய்வது: கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
புதுடில்லி: பூச்சிகளின் பெயரில் கட்சி தொடங்கி ஜனநாயகத்தைக் கேலி செய்யக் கூடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக சாடியுள்ளார்.
வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற கிண்டல் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதன் சமூக வலைதளப் பக்கத்தை ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், மத்திய அரசு அந்த இயக்கத்திற்கு தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களே தங்களது பிரதிநிதிகளை ஜனநாயக முறையின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். நாட்டின் நலனுக்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விலங்குகள் அல்லது பூச்சிகளின் பெயரில் கட்சிகளை தொடங்கி இந்திய ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கக் கூடாது.
இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இந்திய மக்கள் புத்திசாலித்தனமும் விவேகமும் கொண்டவர்கள். எனவே ஜனநாயகம் இந்த வகையில் கேலி செய்யப்படக் கூடாது.
யாராவது அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவர்கள் தாராளமாக குரல் எழுப்பலாம். அரசாங்கக் கொள்கைகளை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம். ஆனால் ஜனநாயகத்தையே கேலி செய்யவோ அவமதிக்கவோ கூடாது. இந்த மாதிரியான செயல்கள் ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
