ஹிந்துக்களை தவறாக பேசினால் திமுக காணாமல் போய்விடும்: காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை
திருச்சி: “ஹிந்துக்களை தவறாக பேசினால் திமுக காணாமல் போய்விடும்” என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடந்தால் அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் ஹிந்து விரோத அரசை தோற்கடிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். அதில் வெற்றி பெற்றுள்ளோம்” என்றும் கூறினார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், அனைத்து மதத்தினரிடமும் சமமாகவும் பொதுவாகவும் நடந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனாதனம் ஒழிப்பு குறித்து சட்டசபையில் பேசியபோது முதல்வர் அதனை கண்டித்திருக்க வேண்டும் என்றார்.
அதேபோல், “கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்ட சபாநாயகர் பிரபாகர், சட்டசபையில் அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக முழுமையாக ஹிந்து விரோத கட்சியாக செயல்பட்டு வருகிறது. திமுகவை சேர்ந்த பொன்முடி, ராஜா, பாலு உள்ளிட்டோர் ஹிந்துக்கள் குறித்து தவறாக பேசியதால் மக்கள் அவர்களை காணாமல் செய்து விட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் திமுகவும் அரசியல் ரீதியாக காணாமல் போய்விடும்” என்று தெரிவித்தார்.
