“புறம் பேசட்டும், புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும்” – திமுக விமர்சனத்துக்கு முதல்வர் விஜய் பதிலடி
சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மக்கள் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான விவாதத்தில் பல்வேறு கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு மற்றும் நடுநிலை கருத்துகளை பதிவு செய்ததாகவும் கூறினார்.
வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், 22 பேர் எதிர்த்ததாகவும், 5 பேர் நடுநிலை வகித்ததாகவும், 60 பேர் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு மகத்தான வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்ததாக தெரிவித்தார்.
அரசை ஆதரித்த அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த விஜய், சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக வெளிப்படையாக நடத்தப்பட்டதாக கூறினார். ஆளும் கட்சிக்கு சாதகமான காட்சிகளை மட்டும் காட்டி எதிர்ப்புகளை மறைக்கும் செயல்களில் தங்கள் அரசு ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழக மக்கள் பலரும் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்பியிருந்தும், சில சூழ்நிலைகளால் அது சாத்தியமாகவில்லை எனவும், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த “பெரும்பான்மை மக்கள் ஆதரவு இல்லை” என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், தங்கள் கட்சி 34.92 சதவிகித வாக்குகளை பெற்றதாகவும், திமுக தனிப்பட்ட முறையில் 24.19 சதவிகிதம் மட்டுமே பெற்றதாகவும் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று ஒரு கோடியே 72 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றதாகவும், திமுகவை விட சுமார் 53 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி பல இடங்களில் வெற்றி பெற முடியாது என்றும், அதே நேரத்தில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றுள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
மதச்சார்பற்ற நிலைப்பாட்டின் காரணமாகவே காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் அரசை ஆதரித்ததாகவும், அதனை திமுக விமர்சிப்பது புரியாத ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.
திமுக தொடர்ந்து பழைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக விமர்சித்த அவர், மக்கள் மன்றத்தில் தோல்வியடைந்த வாதங்களை தற்போது சட்டமன்றத்திலும் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்ததற்கும் பதிலளித்த விஜய், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் தங்கள் வெற்றியின் தாக்கத்தை பார்த்தும் திமுக உணரவில்லை என்று கூறினார். மேலும், அதிகாரத்தை பயன்படுத்திய திமுக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நாகரிகம் குறித்து திமுக பேசியது நகைச்சுவையாக இருப்பதாகவும், தங்கள் இயக்கம் எப்போதும் நாகரிகத்தை காக்கும் என்றும் தெரிவித்தார். அண்ணாதுரையின் கனிவான அரசியல் அணுகுமுறையையே பின்பற்ற விரும்புகிறோம் என்றும் கூறினார்.
1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணியை ஆதரித்ததும், பின்னர் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்றதும் திமுகவின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக விஜய் நினைவூட்டினார்.
“புஷ்பா அரசு” என தங்கள் ஆட்சியை திமுக ஏளனமாக குறிப்பிட்டதை விமர்சித்த அவர், மக்கள் மனதில் வேரூன்றும் அரசாக தங்கள் அரசு இருக்கும் என்று கூறினார்.
“மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்” என்று விஜய் தெரிவித்தார்.
மேலும், திமுக செய்ய முடியாத பல மக்கள் நலத்திட்டங்களை தங்கள் அரசு “மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும்” செய்து காட்டும் என்றும், அமைதியாக சாதித்து காட்டுவோம் என்றும் கூறினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், மக்களின் உணர்வுகளை நம்பியே தங்கள் அரசு செயல்படுகிறது என்றும், திமுக ரீல்ஸ் மற்றும் ரியாலிட்டி குறித்து பேசுவதில் முரண்பாடு இருப்பதாகவும் விமர்சித்தார்.
இறுதியாக, மக்கள் நலன், சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளில் தங்கள் அரசு உறுதியாக செயல்படும் என்றும், அதனை பார்த்து திமுக ஆற்றாமையில் விமர்சிக்கலாம் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
