புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ரகசிய கூட்டணி உள்ளது என்றும், முக்கிய கூட்டணிகள் மக்களுக்கு எந்த பயனும் செய்யவில்லை என்றும் த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி மைதானத்தில் தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் ஏற்கனவே இரண்டு பெரிய கூட்டணிகள் உள்ள நிலையில், தாங்கள் ஏன் வந்துள்ளோம் என்று கேட்கலாம் என்றார். பலமுறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி மக்களை மட்டுமல்ல, தங்களது தலைவர்களையே ஏமாற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
‘காங்கிரஸ் – திமுக கூட்டணி’ என்ற பெயரில் இருந்தாலும், இரு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ. கூட்டணி குறித்து பேசுகையில், அது இணைந்த கூட்டணி அல்ல; இணைக்க முடியாமல் சோர்ந்த கூட்டணி என விமர்சித்தார். இந்த கூட்டணிகள் மக்கள் நலனுக்காக அல்லாமல், அரசியல் நலனுக்காக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ரகசிய அரசியல் நடக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருவதாகவும், அதை காங்கிரஸும் பா.ஜ.வும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்து ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் சார்பாக கேள்வி கேட்டால் கோபப்படுவது சரியல்ல என்றும், ஏமாற்றும் கூட்டணிகள் மற்றும் பொருந்தாத கூட்டணிகளை நம்ப வேண்டாம் என்றும் விஜய் வலியுறுத்தினார்.
“இரண்டு பெரிய கூட்டணிகளுக்கும் வாக்களிப்பது பயனற்றது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்,” என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
