சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும், புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் ஏழு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் திரைப்பட துறையினர், முதல்வர் விஜயை நேரில் சந்தித்து, அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் தினமும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்ததையடுத்து, தமிழக சினிமா தியேட்டர்கள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினமும் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக அரசு அல்லது உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்து தனியாக அனுமதி பெற தேவையில்லை என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்பட துறையினரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
