சென்னை: “குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடைபெறுகிறது. இந்த அரசியல் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?” என்று தமிழக வெற்றிக் கழகத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சட்டசபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது போன்ற அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு, அமமுக உறுப்பினரின் ஆதரவையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “அதிமுக உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்திலேயே தங்கள் கட்சியில் இணைக்கும் காட்சிகள் நடைபெற்று வருகின்றன” என்றும் தெரிவித்தார்.
“இந்த கண்றாவி அரசியல் காட்சிகளைப் பார்க்கத்தானா மக்கள் வாக்களித்தார்கள்?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, “தங்களை ‘தூய சக்தி’ என்று கூறிக்கொண்டவர்கள், தற்போது ‘துயர சக்தி’ என வெளிப்பட்டுள்ளனர்” என்றும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியையும் மறைமுகமாக விமர்சித்த அவர், “என்டிஏ ஆதரவை கோராத வரையில் மட்டுமே ஆதரவு அளிப்போம் என்று கடிதம் கொடுத்தவர்கள், தற்போது அமைச்சரவையில் இருந்து இந்த அரசியல் காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்களின் போலி பாஜ எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
