இந்திய வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ள மோடிக்கு எனது பாராட்டுகள். சமீபத்தில் ரோம் நகரில் அவரை சந்தித்து, இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களை தொடங்கியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்க, “இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக உருவெடுத்துள்ள நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவுடனான நெருங்கிய நட்புறவை இலங்கை மதிக்கிறது. இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலாக உள்ளேன்” என்றார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத் பிசெஸர், “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலக விவகாரங்களில் இந்தியா முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அவர், 140 கோடி மக்களைக் கொண்ட நாட்டை மூன்று பதவிக்காலங்களாக வழிநடத்தி வருகிறார்” என்று பாராட்டினார்.
பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே, மோடியை தனது ரோல் மாடலாகவும், தலைமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தனது வாழ்த்துச் செய்தியில், “இன்று இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். இந்தியா நிலவில் கால்பதித்த சாதனை உள்ளிட்ட பல முக்கிய முன்னேற்றங்கள் உங்கள் தலைமையில் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்பம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியூங், “இந்த சாதனை உங்கள் தலைமையின் மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தியா-கொரியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் புதுமையின் எதிர்காலத்தை இணைந்து உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹ்மத் அலி, “மூன்று தொடர்ச்சியான ஆட்சிக்காலங்களில் இந்தியாவை தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்தியுள்ள மோடிக்கு வாழ்த்துகள். அவரது தலைமையில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது” என்று பாராட்டினார்.
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு, “இந்த சாதனை இந்திய மக்கள் மோடியின் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தேசிய வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பும், உலக அரங்கில் அவரது செல்வாக்குமிக்க தலைமையும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
