புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் என்ற பெயரில் படிக்கட்டில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டது எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் அகந்தையை வெளிப்படுத்துகிறது; இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., ராணுவ அதிகாரிகள், தூதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 204 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
பார்லிமென்ட் வளாகத்தில் கடந்த 12ஆம் தேதி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் கலந்து கொண்டு, படிக்கட்டுகளில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டார்.
இந்த நடத்தையை கண்டித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., ராணுவ அதிகாரிகள், தூதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என 204 பேர் திறந்த கடிதம் வெளியிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், லோக்சபா சபாநாயகர் தடை விதித்திருந்தும் பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் போராட்டம் நடத்தியது பார்லிமென்டின் அதிகாரத்தை புறக்கணிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் மற்றும் சில எம்.பி.க்கள் படிகளில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டது எம்.பி.க்களுக்கு ஏற்ற நடத்தையாக இல்லை; பார்லிமென்ட் படிகள் அரசியல் நாடக மேடையாக பயன்படுத்தப்படக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட அரசியல் நாடகத்திற்காக ராகுல் அரசியல் சாசனத்தின் மாண்பை தாழ்த்தியுள்ளதாகவும், இந்த நடத்தைக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா, ராஜ்யசபா அரங்குகளுக்கு வழங்கப்படும் மரியாதை பார்லிமென்ட் வளாகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்; அங்கு நடைபெறும் செயல்கள் கண்ணியத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அமைப்புகளுக்கு மரியாதை குறைவையும், பார்லிமென்டை விவாதங்களுக்கு பதிலாக அரசியல் மேடையாக பயன்படுத்தும் போக்கையும் காட்டுகின்றன; எம்.பி.க்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
