பீஹார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த நிதின் நபீன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாங்கிபூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக சார்பில் நீரஜ் குமார் சின்ஹா, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பில் ரேகா குப்தா மற்றும் ஜன் சுராஜ் கட்சி சார்பில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டனர்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்தார். மொத்தம் 31 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில், அவர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2010 முதல் பாஜக வசம் இருந்து வந்த பாங்கிபூர் தொகுதியில், நிதின் நபீன் மற்றும் அதற்கு முன்பு அவரது தந்தை நபீன் கிஷோர் பிரசாத் சின்ஹா தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், இந்த வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி அக்கட்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் தடியா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷியாம் சிங் 6,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர பாரதி தண்டனை காரணமாக பதவியை இழந்ததைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல், குஜராத் மாநிலத்தின் மஞ்சள்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் சதீஷ் பட்டேல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் எம்எல்ஏ யோகேஷ் பட்டேல் மறைவையடுத்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
