பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக கோலி, பீல், மேக்வார் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஹிந்து சிறுமியர் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக சிறுபான்மையினர் நல அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டதாக புகார்
அந்த வகையில், சிந்து மாகாணத்தின் டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீதா, ரூபி என்ற அந்த இரு சிறுமியரும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கதறிய சிறுமியர்
இரு சிறுமியரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் அழுதுகொண்டே தங்களை வீட்டுக்கு அனுப்புமாறு கெஞ்சியதாக கூறப்படுகிறது.
எனினும், சிறுமியரை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்த நாளே மற்றொரு சிறுமி கடத்தல்
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே 14 வயதான பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக சிறுபான்மையினர் நல அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. சிறுமியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்வது சட்டவிரோதமானது எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
10 நாட்களில் 6 சிறுமியர்?
செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களுக்குள் மட்டும் 6 ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிந்து மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள இந்தப் புகார்கள், அப்பகுதியில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
