அரசு நிகழ்ச்சிகளில் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து பத்திகளையும் பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் திரைப்பட விழாவில் முழுமையாக பாடல்
ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது.
இதற்கு ஜம்மு – காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறவில்லை.
“சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்”
இந்த நிலையில், வந்தே மாதரம் விவகாரம் குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, அந்தப் பாடலை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், பாடலின் அனைத்து பத்திகளையும் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“காஷ்மீரிகள் சிறை செல்ல வேண்டும் என விரும்புகிறதா?”
மேலும், இந்த உத்தரவு ஜம்மு – காஷ்மீருக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல என்றும், நாடு முழுவதும் பொருந்தும் என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த உத்தரவை மீறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் எனக் கூறிய அவர், “அப்படி இருக்கையில், காங்கிரஸ் அவமதிப்பதைப் போலவே வந்தே மாதரம் பாடலை காஷ்மீரிகள் அவமதித்து சிறை செல்ல வேண்டும் என விரும்புகிறதா?” என கேள்வி எழுப்பினார்.
வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒமர் அப்துல்லாவின் இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
