பாகிஸ்தானில் தீட்டப்பட்ட பஹல்காம் தாக்குதல் சதி: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வந்த பொதுமக்கள் மீது 3 பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மதத்தை கேட்டு அடையாளம் கண்ட பிறகு அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட சுலைமானி ஷா என்ற பைசல் ஜாட், ஜிப்ரன் என்ற ஹபீப் தாஹிர் மற்றும் ஹம்சா ஆப்கானி ஆகிய 3 பயங்கரவாதிகளையும் ஜூலை 29ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 1,597 பக்கங்களை கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பின் தலைவர் ஹபிபுல்லா மாலிக் ஆகியோர் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்பு பயங்கரவாதிகள் மூவரும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்ததாகவும், அதற்கு அப்பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசியதுடன், தங்களது உடைமைகளையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுநாள் தாக்குதல் நடத்துவதற்கு முன், அவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்தியதுடன், பின்னர் போர்வைகளை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை மறைத்துள்ளனர். தொடர்ந்து சிற்றோடை அருகே மறைந்து இருந்து அப்பகுதியை கண்காணித்துள்ளனர்.
பின்னர் பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். தப்பிச் செல்லும் போதும் வழியில் வந்த சிலரை தாக்கியதாகவும், ஒருவரிடம் முஸ்லிம் மத நடைமுறைகள் குறித்து கேட்டு அவர் சரியாக பதிலளித்ததால் அவரை உயிருடன் விட்டுச் சென்றதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக அவர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
