Keir Starmer தலைமையிலான பிரிட்டன் தொழிலாளர் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 1,400க்கும் மேற்பட்ட கவுன்சில் இடங்களை இழந்ததுடன், வேல்ஸ் மாகாண செனட் சபை மீதான கட்டுப்பாட்டையும் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் மட்டுமின்றி, மூத்த அமைச்சர்களும் தற்போது ஸ்டார்மருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்துறை அமைச்சர் மஹ்மூத் மற்றும் வெளியுறவு அமைச்சர் யுவெட் கூப்பர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ஸ்டார்மரை நேரில் சந்தித்து பதவி விலகுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்து வருவதாக கூறி, சில அமைச்சரவை உதவியாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர் கட்சியின் 403 பார்லிமென்ட் உறுப்பினர்களில் 78 எம்.பி.க்கள், ஸ்டார்மர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில் பேசிய கெய்ர் ஸ்டார்மர், “எந்தவொரு சவாலையும் எதிர்த்து போராடுவோம்” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், “2010 முதல் ஐந்து பிரதமர்களையும், 2022ஆம் ஆண்டு நான்கு மாதங்களில் மூன்று பிரதமர்களையும் மாற்றிய கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் குழப்பத்தை, தொழிலாளர் கட்சியும் பின்பற்றினால் மக்கள் அதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
