தேர்தல் பணிக்காக சென்ற ஏழு நீதிபதிகளை ஒரு கும்பல் சிறைபிடித்து துன்புறுத்திய சம்பவத்திற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்த சம்பவம் மம்தா அரசின் தோல்வியை காட்டுகிறது; இது எங்கள் அதிகாரத்துக்கே விடப்பட்ட சவால் போல உள்ளது” என நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, 60 லட்சம் பேரின் விண்ணப்பங்களை கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை 47 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் பெயர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மால்டாவில் சிறப்பு ஆய்வு பணிக்காக சென்ற ஏழு நீதிபதிகளை ஒரு கும்பல் உருட்டுக்கட்டை, தடி போன்ற ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு சிறைபிடித்தது. மாலை 3:30 மணிக்கு அவர்கள் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உடனடியாக மாநில அரசுக்கு தகவல் அளித்தார். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. உள்துறை செயலர் மற்றும் மாநில டி.ஜி.பி.யிடம் உதவி கேட்டபோதும், உறுதிமொழி மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒன்பது மணி நேரம் நீதிபதிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் கும்பல் தடுத்து வைத்திருந்தது. பின்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டதன் மூலம் நள்ளிரவில் அவர்கள் மீட்கப்பட்டனர். அதற்குப் பிறகும், நீதிபதிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டன.
மூன்று பெண்கள் மற்றும் 5 வயது குழந்தை உட்பட ஏழு நீதிபதிகள் மீது நடந்த இந்த கொடுமை குறித்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால் பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
நீதிபதிகள் கூறுகையில், “இது நீதித்துறை அதிகாரிகளை மிரட்டும் நோக்கத்துடன் செய்யப்பட்ட துணிகர முயற்சி. மாநில நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இது தற்செயலான சம்பவம் அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் கரங்கள். இந்த சம்பவம், நீதித்துறைக்கும், உச்ச நீதிமன்ற அதிகாரத்திற்கும் நேரடி சவால்” என தெரிவித்தனர்.
மேலும், “இந்த சம்பவம் அரசியல் நோக்கத்துடன் நடந்திருந்தால், அரசியல் கட்சித் தலைவர்கள் ஏன் அங்கு வரவில்லை? யாரோ ஒருவர் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த சம்பவம் நீடித்துள்ளது” எனவும் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ மூலம் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகளின் வீடுகளுக்கும் குடும்பத்தினருக்கும் துணை ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தல் பணிக்காக செல்லும் நீதிபதிகளுக்கு அருகில் ஐந்து பேருக்கு மேல் கூட வராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
