சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திரைப்படத்தில் நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், நீதிபதி கதாபாத்திரம் லஞ்சம் வாங்குபவராக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
உத்தரவில், ‘கருப்பு’ திரைப்படத்தின் கதை ஒரு கற்பனை நீதிமன்றத்தை மையமாகக் கொண்டது என்றும், அதில் இடம்பெறும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் கதாபாத்திரங்கள் முழு நீதித்துறையையும் பிரதிபலிப்பதாக கருத முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீதித்துறையில் ஊழல் நிகழ்வுகள் இருந்துள்ளன, இருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதியின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், நீதிபதிகளை புனிதர்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய அமைப்புக்குள் தவறுகள் நடைபெறும்போது அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இயல்பானவை என்றும், ஒரு கலைஞருக்கு தனது படைப்பை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். வாய்மொழி, எழுத்து, படம் உள்ளிட்ட எந்த வடிவிலும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அது உள்ளடக்கியுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெறும் ஏழுகிணறு நீதிமன்றம் ஒரு கற்பனை அமைப்பாகும். அதில் இடம்பெறும் ஊழல் சம்பவங்களை வைத்து முழு நீதித்துறையையும் குற்றம்சாட்டுவதாக கருத முடியாது என்பதால், படத்தை தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
