நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். மாணவர் தற்கொலை சம்பவங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும், தேர்வுக்கு முன்பாக மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தானின் கோட்டாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, கல்வித் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க உரிமை இருந்தாலும், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அரசியல் செய்யக்கூடாது என்றார். நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரம், பெற்றோரின் கோரிக்கையின்படி நடைபெற்றது என்றும், பின்னர் மாணவரின் வசதிக்காக தேசிய தேர்வு முகமை அந்த மையத்தை நாக்பூருக்கு மாற்றியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
