நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிர்வாகத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அமைப்பில் பணியாற்றி வந்த 47 அலுவலர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மற்றும் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் நிரந்தர, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்கள் என மொத்தம் 221 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக மாறியது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக வினாத்தாளை தயாரித்த பேராசிரியர்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய தேர்வு முகமையில் பணியாற்றிய சில அலுவலர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய கல்வித் துறையின் உத்தரவின் பேரில் 47 அலுவலர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேசிய தேர்வு முகமையின் நிர்வாக அமைப்பை அடுத்த ஒரு மாதத்திற்குள் முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
