புதுடெல்லி: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET) நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பதாகவும், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் Joseph Vijay தெரிவித்துள்ளார்.
பிரதமர் Narendra Modi தலைமையில் தில்லியில் நடைபெற்ற NITI Aayog கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
தமிழ்நாடு 2036ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பத் திறன் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, மேகக் கணினி, மின்சார வாகனங்கள் மற்றும் குறைக்கடத்தி தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்க மத்திய அரசின் ஆதரவை அவர் கோரினார்.
நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர் விஜய், மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான இடங்களை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், ‘வறுமையற்ற தமிழ்நாடு’ இயக்கத்தை அறிமுகப்படுத்துவது, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவது, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்க வேண்டும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும், ‘ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
மேலும், தொன்மையான தமிழ் இலக்கியமான Thirukkural நூலை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
