நீட் தேர்வு தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்த சிலர் முன்வைக்கும் எதிர்ப்புகள் அடிப்படை புரிதலின்றி கூறப்படுவதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி மற்றும் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் சிலர் நீட் தேர்வை எதிர்த்து கருத்து தெரிவித்து வருவதாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு அதிகரித்ததாகவும் தமிழிசை தெரிவித்தார்.
நீட் அறிமுகத்திற்கு முன்பு, அதிக செலவில் பயிற்சி மையங்களில் படித்து அல்லது அதிக கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நடைமுறையே அதிகமாக இருந்ததாகவும், நீட் தேர்வு அந்த முறைகேடுகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணமும் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகின் பல நாடுகளில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், மனித உயிரைக் காக்கும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், நீட் தேர்வின் அவசியத்தை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
மருத்துவக் கல்வி தொடர்பான முழுமையான தகவல்களை அறியாமல், நீட் தேர்வை எதிர்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்று மத்திய அரசை விமர்சித்திருந்தனர்.
